பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
12:07
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தில், கி.பி., 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த, வரலாற்று ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது: எனதிரிமங்கலம் கிராமத்தில் இருந்து, தென் பெண்ணையாற்றங்கரை செல்லும் வழியில் உள்ள வாய்க்கால் புதரில், சிற்பம் ஒன்று கிடந்தது. 110 செ.மீ., உயரமும், 46 செ.மீ., அகலமும் கொண்ட சிற்பத்தின் வலது புறம் மற்றும் இடது புறத்தில் பெண் உருவ யட்சிகளும் (பெண் துாதுவர்), அவற்றின் கீழே மிருகம் போன்ற உருவம் ஒன்றும் சிதைந்து காணப்படுகின்றன.தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் வழக்கமாக காணப்படும் முக்குடை உடைந்துள்ளது.
இரண்டு மாதத்திற்கு முன், இதே கிராமத்தில், தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கிடைத்தது. இதுபோன்ற சிற்பங்களை, பண்ருட்டி, திருவதிகையிலும், வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சமணர்களின் கோவில்கள் இருந்துள்ளன. தற்போது,தடயங்கள் மட்டுமே கிடைத்து வருகின்றன. இவ்வாறு, இம்மானுவேல் கூறினார்.