பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
12:07
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட் டம், கீரனுார் அருகே, மது பழக்கத்தை மறக்க, கோவிலில் கயிறு கட்டப்படுகிறது. புதுக்கோட்டை மாவட் டம், கீரனுார் அருகே, கிள்ளுக்கோட்டை பகுதியில், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய, பழமையான வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு, வாரம்தோறும் செவ்வாய் கிழமை, காலை, 6:00 முதல், மாலை, 5:00 மணி வரை, பிரார்த்தனை மற்றும் பரிகார பூஜை நடத்தப்படுகிறது.
குறிப்பாக, மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க, சிறப்பு கயிறு கட்டப்படுகிறது. இக்கோவிலில், 40 ரூபாய்க்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றுடன், 2 முழம் சிகப்பு கயிறும் தருகின்றனர். கோவில் அர்ச்சகர் ராஜா சிவாச்சாரியார், கொடி மரத்தின் முன், போதை ஆசாமியை நிற்க வைத்து, பலி பீடத்தில் சூடம் ஏற்றி, ‘மது அருந்த மாட்டேன்’ என, சத்திய பிரமாணம் எடுக்க வைக்கிறார். தொடர்ந்து, மூலிகை தண்ணீரை போதை ஆசாமி மீது, மூன்று முறை தெளித்து, கையில், சிவப்பு கயிறை கட்டி அனுப்புகிறார். அம்மன் முன், சத்தியம் செய்து கயிறு கட்டிய பின், மது அருந்தினால் அம்மனின் கோபத்துக்கு ஆளாகி, தெய்வ குத்தம் ஏற்பட்டு விடும் என பயந்து, பலர் குடியை விட்டு விடுகின்றனர். இந்த கோவிலுக்கு திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து, ஏராளமானோர் வந்து கயிறு கட்டிச் செல்கின்றனர். ராஜா சிவாச்சாரியார் கூறுகையில், ‘‘இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டிக் கொண்டவர்கள், உறுதியாக இருந்து, மது குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். போதை பழக்கத்தை தடுக்க, என்னால் முடிந்ததை செய்து வருகிறேன்,’’ என்றார்.