பதிவு செய்த நாள்
13
ஜூலை
2017
12:07
நல்லாங்குளத்தின் படிகள் உடைந்து உள்ளதாலும், குளத்துநீர் துர்நாற்றம் வீசுவதாலும், வரும், ஆடிக்கிருத்திகைக்கு முன், குளம் துார்வாரி சீரமைக்கப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்தணி நகராட்சி, மேல் திருத்தணியில், நல்லாங்குளம் உள்ளது. இக்குளத்தை, நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆண்டுதோறும் முருகன் கோவிலில் நடக்கும் ஆடி கிருத்திகை திருவிழாவின் போது, மூன்று நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து, இக்குளத்தில் புனிதநீராடிய பின், மலைக் கோவிலுக்கு சென்று மூலவர் முருகப்பெருமானை வழிபடுவர்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், நல்லாங்குளத்தை உரிய முறையில் பராமரிக்காததால், தற்போது குளத்தின் படிகள் உடைந்துள்ளன. மேலும், இங்கு, சில சமூக விரோதிகள், மதுவை குடித்துவிட்டு, பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாக்கெட்டுகளை குளத்தில் வீசுவதாலும், அப்பகுதிவாசிகள் சிலர், குளத்தில் துணிகள் துவைப்பதாலும், தண்ணீர் மாசு படிந்து துர்நாற்றம் வீசுகிறது. வரும், ஆகஸ்ட் மாதம், 15ம் தேதி, ஆடி கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் தெ ப்ப திருவிழா நடக்க உள்ளதால், புனித நீராட வரும் பக்தர்கள், முகம் சுளிக்கும் நிலை ஏற்படும். இது தவிர, குளத்தில் தற்போது மிக குறைந்த அளவில் தண்ணீர் மட்டுமே உள்ளதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குளத்தை துார்வாரி சீரமைத்தால், மழை பெ ய்ததால் சுத்தமான தண்ணீரை சேமிக்க முடியும். ஆடி கிருத்திகை விழாவிற்கு முன், ஒவ்வொரு ஆண்டும், திருத்தணி நகரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் நடப்பாண்டிலும், பலத்த மழைக்கு, அதிக வாய்ப்புகள் உள்ளதால், குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பழுதடைந்த நல்லாங்குளத்தை சீரமைத்து தர வேண்டும் என, நகரவாசிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.