பதிவு செய்த நாள்
13
ஜூலை
2017
12:07
ஆர்.கே.பேட்டை: மும்மூர்த்திகளுடன், விநாயகர், முருகர் என, ஒரே விக்ரகத்தில் அமைந்துள்ள பஞ்சமூர்த்தி கோவிலின் மண்டபம், முற்றிலும் மாறுபட்டதாக, பக்தர்களை கவர்ந்து வருகிறது. சிவன், விஷ்ணு, பிரம்மா என, மும்மூர்த்திகளும், அவர்களுடன் விநாயகர், முருகர் என, பஞ்சமூர்த்திகள் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள விக்ரகத்தை மூலவராக கொண்டுள்ளது பால குருநாத ஈஸ்வரர் கோவில்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, பொம்மராஜபுரம் எனப்படும் ராசபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த விசித்திரமான கோவில் வளாகத்தில், மிகவும் பழமையான ஆலமரம், தன்னுடைய எண்ணற்ற விழுதுகளால், 1,000 கால் மண்டபம் போன்று காட்சியளிக்கிறது. அம்மையார்குப்பத்தில் இருந்து, மட்டவளம் வழியாக, காட்டு கன்னி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது பொம்மராஜபுரம். இந்த கிராமத்தின் வட கிழக்கு மூலையில், 400 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. ஐந்து கிரவுண்ட் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலமரத்தின் அடியில், பாலகுருநாத ஈஸ்வரர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்திற்கு, பாறைகளால், மதில் எழுப்பப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையான சூழலில், அமைதி தவழும் இந்த வளாகத்தில், பசுமை குடி கொண்டுள்ளது.
எண்ணற்ற விழுதுகளுடன், 5 கிரவுண்ட் பரப்பளவிற்கு இந்த ஆலமரம் விஸ்ரூபம் காட்டி வருகிறது. ஆலமரத்தின் கிளைகளை விட, அதிக பருமனில் உள்ளன அதன் விழுதுகள். வயது மூப்பு காரணமாக, தாய் மரத்துடன் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள கிளைகள், பலமான விழுதுகளுடன் தனிமரமாக வீற்றிருக்கின்றன. சுற்றுப்பகுதியில் வேறு எங்குமே காண முடியாத இந்த அதிசய ஆலமரம் போன்றே, அதன் அடியில் அமைந்துள்ள கோவிலின் மூலவரும் வித்தியாசமானது. படைத்தல், காத்தல், அழித்தல் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என, மும்மூர்த்திகள் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளனர். அதே கல்லில், விநாயகர், முருகர் சிலைகளும் அமைந்துள்ளன. சிவனுடன், விஷ்ணு சிலையும் உள்ளதால், இந்த கோவிலில் நந்தி சிலை கிடையாது. ஆனால், கார்த்திகை தீப திருவிழா, சோமவார வழிபாடு, பவுர்ணமி பூஜை உள்ளிட்டவை விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. காணும் பொங்கல் நாளில், காட்டு கன்னி கோவிலுக்கு செல்லும் அம்மையார் குப்பம் பகுதிவாசிகள், இங்கு சிறப்பு தரிசனம் செய்கின்றனர்.