பதிவு செய்த நாள்
14
ஜூலை
2017
12:07
சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். கோபித்து கொண்டு சென்ற அவர்களை, ஆண்கள் சமாதானம் செய்து அழைத்து வந்தனர். சென்னிமலை அருகே உள்ள அண்ணாமலைபாளையம், புதுவலசு, சரளைக்காடு, நல்லபாளி ஆகிய ஊர்களை சேர்ந்த பெண்கள் நேற்று மாலை, 3:.30 மணிக்கு நல்லபாளியில் உள்ள செவ்வந்தீஸ்வரர் கோவிலில் ஒன்று கூடினர். அப்போது, நம் ஊரில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை.
குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது. இந்த ஊரில் பிழைக்க முடியாது. அனைவரும் வெளியூருக்கு சென்று, பிழைப்பு நடத்தி குழந்தைகளை காப்பாற்றுவோம் என, பெண்கள் ஒப்பாரி வைத்து, அழுது கொண்டே ஊர் எல்லையை கடந்து, மூன்று கி.மீ., தூரத்தில் உள்ள கணுவாய் என்ற இடத்துக்கு வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து ஏர், கலப்பையுடன் சென்ற ஆண்கள், சாலையின் குறுக்கே வேலி முற்களை போட்டு, நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். நாங்கள் எப்படியாவது உங்களை காப்பாற்றுகிறோம். வீட்டுக்கு திரும்பி வாருங்கள் என, பெண்களின் கைகளை பிடித்து கெஞ்சினர். பிறகு, பெண்கள் சமாதானம் அடைந்து, நல்லபாளி செவ்வந்தீஸ்வரர் கோவிலுக்கு திரும்பினர். அங்கு, அனைத்து வீடுகளில் இருந்து ஏற்கனவே கொண்டு வரப்பட்ட உணவை, ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து, அனைவருக்கும் வழங்கினர்.
இதுகுறித்து பெண்கள் கூறியதாவது: தற்போதுள்ள பஞ்சத்தை போல், நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. ஒரு குடம் தண்ணீருக்கே, மிகவும் சிரமப்படுகிறோம். இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தினால், மழை பொழியும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர்கள் கூறினர்.