பதிவு செய்த நாள்
14
ஜூலை
2017
12:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட கடுமையான விதிமுறையாலும், ஏலம் ஆரம்ப தொகை அதிகமாக இருந்ததாலும், நெய் தீப விற்பனை டெண்டரை, ஏலதாரர்கள் புறக்கணித்தனர். இதனால், கோவில் நிர்வாகமே நெய் தீப விளக்கை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமியில், லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் செல்கின்றனர். கார்த்திகை தீப திருவிழாவின்போது, தீப ஜோதியாக அருணாசலேஸ்வரர் காட்சியளிப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி, சுவாமி தரிசனம் செய்வர். பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், நவக்கிரக சன்னதி அருகே, நெய் தீப விளக்கு ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 2005க்கு முன் வரை, தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, நெய் தீபம் விற்கப்பட்டது. அதன்பின், கோவில் நிர்வாகமே நெய் தீபம் விற்பனையை நடத்தி வருகிறது. ஒரு நெய் தீப விளக்கு, ஒரு ரூபாய் எனவும், ஒரு நவதான்ய விளக்கு மற்றும், எட்டு நெய் விளக்கு சேர்த்து, ஒரு விளக்கு செட், 10 ரூபாய் எனவும் விற்கப்படுகிறது. இதற்காக, ஆவின் நிர்வாகத்திடமிருந்து, மாதம் தோறும் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், நெய் தீப விளக்கு விற்பனையை, தனியார் மூலம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான டெண்டரை, கடந்த மாதம், 23ல் நடத்தியது. டெண்டரில் பங்கேற்க ஒப்பந்த தொகை, 10 லட்சம் ரூபாய், காப்பு தொகை, இரண்டு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும்; ஏலம் முடிந்தவுடன், ஏலத்தொகை முழுவதும், டிடியாக அளிக்க வேண்டும் என, 26 நிபந்தனைகளுடன் டெண்டர் நடத்தப்பட்டது. இதில், 13 பேர் பங்கேற்றனர். மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் வான்மதி தலைமையில் ஏலம் நடந்தது. ஏலம் ஆரம்ப தொகையாக, 33 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்து ஏலதாரர்கள் அனைவரும், ஏலம் கேட்காமலேயே திரும்பி சென்றனர். தொடர்ந்து, கோவில் நிர்வாகமே தீப நெய் விளக்கு விற்பனையை செய்து வருகிறது.
இதுகுறித்து, ஏலத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: கோவிலில், ஆண்டுக்கு, 33 லட்சம் ரூபாய் அளவுக்கு நெய் தீப விளக்கு விற்பனை ஆகிறது. ஒரு நெய் தீப விளக்கில், ஐந்து கிராம் நெய் இருக்க வேண்டும். ஒரு விளக்கு, ஒரு ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என, விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆவின் நெய், ஒரு கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், 200 விளக்கு மட்டுமே தயார் செய்து, 200 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய முடியும். மேலும், ஆட்கள் கூலி, திரி போன்ற செலவினங்கள் உள்ளன. மேலும், கோபுர வாசலில் தனி நபர்கள் நெய் விளக்குகளை விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க, கோவில் நிர்வாகம் மறுக்கிறது. கோவில் நிர்வாகம் சார்பில் விற்கப்படும் நெய் தீப விளக்கில், இரண்டு கிராம் அளவிற்கே நெய் உள்ளது. அவர்களே விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. ஏலத்தொகையும் அதிகம் என்பதால், யாரும் ஏலம் கேட்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் கூறியதாவது: அறநிலையத்துறை விதிமுறைப்படியே, நெய் தீப விளக்கு டெண்டர் நடத்தப்பட்டது. ஏற்கனவே, கடந்த, 2005க்கு முன், கோவிலில், தனியார் நெய் தீபம் விற்பனை செய்தனர். அவர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தார்களோ, அந்த தொகையிலிருந்து, ஒவ்வொரு ஆண்டுக்கும், 15 சதவீதம் உயர்த்தி, அதன் அடிப்படையில் ஏலத்தொகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அதன்படியே ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஏலம் எடுக்க விரும்புவோர், அதிக லாபத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால் யாரும் ஏலம் எடுக்கவில்லை. தற்போது கோவில் நிர்வாகம் சார்பில், ஒரு நெய் தீப விளக்கு, ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. அதனால், கோவில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நெய் தீப விளக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.