பதிவு செய்த நாள்
14
ஜூலை
2017
12:07
கரூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. கரூர் அருகே, கருப்பன்பாளையத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 185 சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, கண்ணன் தலைமையிலான குழுவினர், பத்து நாட்களாக விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகின்றனர். பேப்பர் கூல் பொருட்களால் விநாயகர் சிலை தயார் செய்யும் பணிகள் துவங்கி, வண்ண, வண்ண பெயின்ட்களால் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இங்கு அன்னமயில், பசு, நந்தி, புலி, சிங்கம், பாம்பு, கருடன், சிவன்பார்வதி போன்ற விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சிலைகள் நான்கு அல்லது ஐந்து நாட்களில் பணிகள் நிறைவடைந்த பின் கரூர், குளித்தலை, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கடவூர், உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில், 20 ஆண்டுகளாக ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிலைகள், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டு விழா சிறப்பாக நடத்தவுள்ளோம், என்றார்.