பழநி: பழநியில் பலத்த காற்றால் அடிக்கடி ரோப்கார் இயக்கம் நிறுத்தப்படுவதால், அதில் பயணம் செய்ய முடியாத பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் எளிதாக செல்லரோப்காரும், 8 நிமிடத்தில் செல்ல 3 வின்ச்-களும் தினமும் இயக்கப்படுகின்றன. சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால், ரோப்கார் சேவை அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி 40 கி.மீ., வேகத்திற்கு மேலாக காற்று வீசும்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. நேற்று மதியம் 12:௦௦ மணிக்கு பலத்த காற்று வீசியதால் ரோப்கார் நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்ய அரைமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். டிக்கெட் பெற்ற பயணிகள் வின்ச்-சில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பலத்த காற்று காரணமாக ரோப்கார் சேவை அடிக்கடி பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வின்ச் மற்றும் படிப்பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். தற்போது இரண்டாம் வின்ச் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் குவியும் பக்தர்கள் மற்ற வின்ச்களுக்காக 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு செல்கின்றனர்.