பதிவு செய்த நாள்
15
ஜூலை
2017
11:07
பொன்னேரி: பாசிபடிந்தும், புதர்மண்டியும் பொலிவிழந்து கிடக்கும் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில், பாலசுப்ரமணிய சுவாமி திருக் கோவில் அமைந்துள்ளது.
திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், குழந்தைகளும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்லும் முன், நேர்த்திக்கடனுக்காக முடிகாணிக்கை செய்து, இங்குள்ள கோவில் குளத்தில் நீராடுவது பக்தர்கள் வழக்கம். இந்நிலையில், திருக்குளத்தை சுற்றி புதர்மண்டியும், பாசிபடிந்தும் கிடக்கிறது. குப்பைக்கழிவுகளும் அதிகளவு தேங்கியுள்ளதால், துர்நாற்றம் எழுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். மேலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கோவில் குளத்தை உரிய முறையில் பராமரிக்கவும், சுற்றுச்சுவர் அமைத்து, நீராட படித்துறை ஏற்படுத்த வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.