பதிவு செய்த நாள்
17
ஜூலை
2017
12:07
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில்களில் ஜூலை 26ல் ஆடிப்பூரத் திருவிழா நடக்கிறது. அன்று மாலைதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகை எழுந்தருள்வார்.அம்பாள் முன், வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி, பூஜைகள் நடக்கும். அரிசி, நெல், வெல்லம், வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி, வேப்பிலை, மஞ்சள்கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்புக் கட்டப்படும். படிகளில் வைக்கப்பட்டிருக்கும் நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள் முன் மூன்றுமுறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபிஷேகம் நடைபெறும். கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில், மூலவருக்கு வளையல்கள் அணிவிக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து பிரசாதம் வழங்கப்படும். விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் மூலவர் விசாலாட்சி அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, லலிதா சகஸ்ர நாமம் பாடப்படும்.