ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் கோயிலில் ஜூலை 28 ல் ஆடித்திருக்கல்யாண விழாவை யொட்டி, இன்று (ஜூலை 17) கோயிலில் கொடி ஏற்றப்பட உள்ளது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடித்திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் ஆடித்திருக்கல்யாணம் விழா இன்று கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க காலை 10:30 மணிக்குள் திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ஆடி அமாவாசையான ஜூலை 23 ல் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஸ்ரீ ராமர் எழுந்தருளி பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுத்ததும், ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள்.
ஜூலை 25ல் ஆடித் தேரோட்டம், ஜூலை 27 ல் தபசு மண்டபகப்படியில் சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கும். பின் ஜூலை 28 ல் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் இரவு 7 - 8:30 மணிக்குள் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழாவும், ஆக.,2ல் சுவாமி, அம்மன் கெந்தமாதன மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி தெரிவித்தார்.