பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
12:07
தர்மபுரி: தர்மபுரி அடுத்த ஆலிவாயன் கொட்டாயில் உள்ள பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று வெகுவிமர்சையாக நடந்தது. தர்மபுரி அருகே ஆலிவாயன் கொட்டாயில், பிரசித்தி பெற்ற ஓம்சக்தி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின், 18ம், ஆண்டு திருவிழா, கடந்த, 8ல், கொடியேற்றம் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 16ல், மதிகடா சூரசம்ஹார நாடகம் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, ஆலிவாயன் கொட்டாயில் இருந்து, திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி வந்தும், தீச்சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள், உடல் முழுவதும் எழுமிச்சை பழங்களால் அலகு குத்தி, அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். முக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த வீரப்பன் என்ற வாலிபர், தனது உடலில், 505 எலுமிச்சை பழங்களை உடலில் குத்தி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். இக்கோவிலில், இன்று (ஜூலை 18) மாலை, 3:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. பின், முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் நடக்கிறது. இதேபோல், தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டி அங்காளம்மன் கோவிலில், ஆடி பிறப்பை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. நேற்று காலை, பழைய குவாட்டர்ஸ் பகுதியில் இருந்து, பக்தர்கள் கரகம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், சுவாமிக்கு, சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.