பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
12:07
வேடசந்துார்; விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 500 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில், இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா, விநாயகர் சிலை ஊர்வலங்களுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் ஆகஸ்ட் 25-ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிழங்குமாவு மற்றும் பேப்பர் கூழால் தயாரிக்கப்பட்ட 500 விநாயகர் சிலைகள், இந்துமுன்னணி சார்பில் விழுப்புரத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்டன.
வேடசந்துார் அருகே பூத்தாம்பட்டியில் சிலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். மூன்று அடி முதல் 13 அடி வரை உயரம் உள்ள அந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி முழு வீச்சில் நடக்கிறது. இப்பணி முடிந்தபின், அவை திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்துார், ஆத்துார் என தாலுகா வாரியாக அனுப்பப்படும். அப்பகுதி நகரம், கிராமங்களில் ஓரிரு வாரங்கள் வைத்து பொதுமக்கள் வழிபட அனுமதிப்பர். பின் அவை ஒட்டு மொத்தமாக ஆடல், பாடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விநாயகர் சதுர்த்தியையொட்டி நீர்வளமுள்ள கண்மாய், குளங்களில் கரைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.