பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
12:07
உடுமலை: உடுமலை அருகே, பழங்கால ஆட்சி முறைக்கு, உதாரணமாக , நடுகற்களை உள்ளடக்கிய கோவில், வரலாற்றை இன்றும் பாதுகாத்து வருகிறது. மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடியில், தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தில், திறந்த வெளியில் அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் மாலை கோவில் என அழைக்கும் கோவில். நான்கு புறமும், பெரிய துாண்கள் போன்ற கற்கள் நடப்பட்டு, மத்தியில், ஒரு சிலை உள்ளது. இக் கோவிலில், மை வாடி சுற்றுப்பகுதி மக்கள் குறிப்பிட்ட நாட்களில் வழிபாடு நடத்துகின்றனர். வரலாறு சொல்லும் சாமி விஜயநகர பேரரசு காலத்தில், தமிழகம் பாளையங்களாக பிரிக்கப்பட்டு, ஆட்சி நடத்தப்பட்டது. அவ்வாறு, மை வாடியை தலைமையிடமாக கொண்டு ஒரு பாளையம் இருந்தது.
சுற்றுப்பகுதி கிராமங்களில் வரி வசூல், காவல் பணி மற்றும் மேம்பாட்டு பணிகளை பாளையக்காரர்கள் மேற்கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு பிறகு, மை வாடி பாளையம், அழிந்தது. அங்கிருந்த பாளையக்காரர்களின் வாரிசுகள் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இத்தகைய பாளையக்காரர்கள் ஆட்சிமுறைக்கு, உதாரணமாக, மை வாடி பகுதியில், பல்வேறு சிலைகள், கோவில்கள் காணப்படுகின்றன. இதில், ஒன்றாக, தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தில், இந்த மாலை கோவில் அமைந்துள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், ‘உடுமலை சுற்றுப்பகுதியில், பாளையக்காரர்கள் ஆட்சி முறை சிறப்பாக இருந்துள்ளது. ‘‘சுதந்திரபோராட்டத்தின் போது, ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய, பல பாளையங்கள் அழிக்கப்பட்டன. மை வாடியில், மக்கள் வழிபடும் சிலை, சதிக்கல், எனப்படும், வகையை சேர்ந்ததாக இருக்க லாம். இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் வழிபாட்டில், இருப்பதால், திறந்த வெளியில் இருந்தாலும்,சிலை பாதுகாப்புடன் உள்ளது,’ என்றனர்.