திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நேற்று கொடியேற்றதுடன் துவங்கியது.திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை அடுத்து, சிறப்பு மிக்க விழாவாக திரிபுர சுந்தரி அம்மன் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெறுகிறது. இந்தாண்டு இவ்விழா நேற்று காலை, 6:00 மணிக்கு தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் கொடியேற்ற வைபவத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன.இதையடுத்து, திரளாக பக்தர்கள் பங்கேற்று, கொடியேற்றம் நடத்தப்பட்டது. பின், நாதஸ்வர வாத்தியங்களுடன், வாண வேடிக்கை முக்கிய வீதி உலா நடந்தது.