பதிவு செய்த நாள்
22
நவ
2011
11:11
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா நாளை நடக்கிறது. ஐந்து ரத்தன சபைகளில், முதல் சபையாக விளங்குகிறது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரம் அன்று தெப்பத் திருவிழா நடந்து வருகிறது. அதே போல், நாளை (23ம் தேதி) சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு, தெப்பத் திருவிழா நடக்கிறது. விழாவை ஒட்டி காலை 9 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், தேன், விபூதி போன்ற அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு வண்டார் குழலியம்மன், வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலின் பின்புறம் உள்ள, சென்றாடு திருக்குளத்திற்கு வந்தடையும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி கோவில் இணை ஆணையர் தனபால் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.