மரக்காணம்: தாழங்காடு கிராமத்தில் நடந்த கோவில் திருவிழா திடீரென நிறுத்தப்பட்டது. மரக்காணம் அடுத்த தாழங்காடு கிராமத்தில் பொன்னியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன், அதே கிராமத்தை சேர்ந்த ரவி, ராமலிங்கம், தாமோதரன், ரவி ஆகியோர் சேர்ந்து, இந்த கோவிலை கண்ணபிரான் அறக்கட்டளை என்ற பெயரில் பதிவு செய்துள்ளனர். வழக்கம் போல் ஆடி மாதம் முதல் செவ்வாய்கிழமையான நேற்று காலை, பொதுமக்கள் திருவிழாவை நடத்தினர். இதற்கிடையே ரவி உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து, அறக்கட்டளை அனுமதியின்றி திருவிழா நடத்துவதாக, மரக்காணம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று திருவிழாவை நிறுத்த கூறினர். இதன்படி, திருவிழா திடீரென நிறுத்தப்பட்டது. கிராம பொதுமக்கள் சார்பில், திருவிழா நடத்த அனுமதி கோரி, மரக்காணம் தாசில்தார் சீனுவாசனிடம் மனு அளித்தனர்.