ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை, புரட்டாசி மாதம் சனிக்கிழமை விசேஷமாக கருதப்படுவது போல், கார்த்திகை மாதம் சோமவாரம் என்றழைக்கப்படும் திங்கள் கிழமை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. முக்கிய சிவத்தலங்களில் 108, ஆயிரத்து எட்டு சங்காபிஷேக நிகழ்ச்சியை பக்தர்கள் தரிசித்தால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஸ்ரீநடராஜர் சன்னதியில் சங்காபிஷேகம் நடந்தது. ஆயிரத்து எட்டு சங்குகள் வைக்கப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரில் சுவாமிக்கு விஷேச பூஜை நடந்தது. முதல் சங்காபிஷேக நிகழ்ச்சி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.