பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
01:07
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவில், ஆடி கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்த சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆடி கிருத்திகை விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கந்தசுவாமி பெருமானுக்கு, சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.விழாவில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின், பல பகுதிகளிலிருந்து வந்த, ஏராளமான பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழாவையொட்டி, நேற்று காலை, மாலை என, இரு வேளையும் திருவீதியுலா நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்த சுவாமி பெருமான், மாட வீதிகளில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாட வீதிகளில், வசித்து வரும் உள்ளூர் வாசிகள் கந்த பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். மேலும், நேற்று நாள் முழுவதும், திருக்கோவிலை சுற்றிலும் ஆங்காங்கே, அன்னதானங்கள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.