பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
01:07
பழநி, பழநி முருகன் கோயிலில் நாதஸ்வர குழு காலிப்பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளதால், உபகோயில்களில் காலபூஜையில் மங்கள வாத்தியங்கள் இசைப்பது பாதிக்கப்பட்டுள்ளது.பழநி முருகன் மலைக்கோயில் அதன் உபகோயில்களான திருஆவினன் குடிகோயில், பெரியநாயகியம்மன்கோயில், மாரியம்மன்கோயில், ஒட்டன்சத்திரம்குழந்தை வேலப்பவர் கோயில்களில் அன்றாடம் ஆறுகால பூஜையின்போது பாரம்பரிய முறையில் நாதஸ்வரம், தவில், ஒத்து மற்றும் தாளம் உள்ளிட்ட நாதஸ்வர குழுவினர் வாசிப்பர். இதற்காக ஒருகுழுவிற்கு 4பேர் வீதம் எட்டு குழுவினர் பணிபுரிந்தனர். கடந்த பத்துஆண்டுகளாக நாதஸ்வர குழுவினர் காலிப்பணியிடங்கள் நிரப்படாமல் கிடப்பில் விட்டுள்ளனர்.
தற்போது மூன்றுகுழுவினர் மலைக்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடி கோயில்களில் மங்களவாத்தியங்களை இசைக்கின்றனர். ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர், பாலசமுத்திரம் பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில் போன்ற உபகோயில்களில் ஆறுகால பூஜையின்போது மங்களவாத்தியங்கள் இசைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் மட்டுமே இசைக்கின்றனர். மேலும் நாதஸ்வர பள்ளியில் படிக்கும் மாணவர்களை பயன்படுத்துவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நாதஸ்வர இசைக்கலைஞர்கள் திறன் மேம்பாட்டிற்காக ரூ.50 லட்சம் செலவிடும் நிர்வாகம், காலியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ காலபூஜையின் போது மங்கள வாத்தியங்கள் வாசிக்கப்படுகிறது. திருவிழா நேரத்தில் நாதஸ்வர பள்ளி மாணவர்கள் அனுபவம் பெறுவதற்காக பிறகலைஞர்களுடன் இணைந்து வாசிக்கின்றனர். ஓதுவார்கள், அர்ச்சகர், நாதஸ்வரம், தவில், தீவட்டி உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பவும் அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி கோரப் பட்டுள்ளது. விரைவில் நிரப்பப்படும்” என்றார்.