நாமகிரிப்பேட்டை: சக்தி முருகன் சித்தர் பீடம் கோவில் ஆடி திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். நாமக்கல் மாவட்டம், திம்மநாயக்கன்பட்டி அடுத்த, வேப்பிலைக்குட்டையில் ஓம் சக்தி முருகன் சித்தர் பீடம் கோவில் உள்ளது. இங்கு, ஆடி திருவிழா, நேற்று காலை கோமாதா பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, பக்தர்களின் அங்க பிரதட்சணை, லட்சுமி பூஜை நடந்தது. மதியம், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரில், சுவாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், குழந்தையின் எடைக்கு எடை காசு காணிக்கை செலுத்தி, கோரிக்கை நிறைவேற்றினர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.