பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
01:07
ஈரோடு : ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி செய்து வழிபட்டனர். புன்செய்புளியம்பட்டி பிளேக் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கவசத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதேபோல், ஊத்துக்குளியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரி அம்மன், ஆதிபராசக்தி அம்மன் கோவில்களிலும், சிறப்பு பூஜை நடந்தது. கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில், ஆடி அமாவாசையை ஒட்டி, அதிகாலையே கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவரான மகுடேசுவரர், வடிவுடை நாயகி அம்மன், வீரநாராயண பெருமாள், மகாலட்சுமி தாயார், பிரம்மா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தொடங்கியது. காவிரியாற்றில் புனித நீராடி, படித்துறைகளில் அமர்ந்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், ஆற்றில் பிண்டம் கரைத்தும் வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், மகுடேசுவரர் கோவிலில், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டை விட கூட்டம் அதிகமாக இருந்தது. மொத்தம், 20 ஆயிரம் பக்தர்கள் வந்ததாக, கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர். பூங்காவில் குவிந்த மக்கள்: ஆடி அமாவாசையை ஒட்டி, நேற்று காலை முதலே, பவானிசாகர் பூங்காவுக்கு மக்கள் வரத் தொடங்கினர். ஈரோடு மட்டுமின்றி, கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர். பூங்காவில், குழந்தைகள் ஊஞ்சல் ஆடியும் சறுக்குகளில் ஏறி விளையாடியும் குதூகலித்தனர். சிறுவர்கள் பெற்றோர்களுடன் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். - நமது நிருபர் குழு -