பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
01:07
தர்மபுரி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி ஆமாவாசையை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, முத்தம்பட்டி வீரஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையடுத்து, வீர ஆஞ்சநேயர், வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில், தர்மபுரி ஹரிஹரநாதர் தெரு ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோட்டில் உள்ள வீரதீர ஆஞ்சநேயர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஆடி அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவிலில், நேற்று கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, 108 பால் குடம் ஊர்வலம், பாலாபிஷேகம் நடந்தது. இதேபோல், வெளிப்பேட்டை அங்காளம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், ஆடி அமாவாசையை யொட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள், தங்கள் முன்னோருக்கு திதி கொடுத்து, குடும்பத்துடன் வழிபட்டனர். தர்மபுரி அடுத்த மொடக்கோரி சிவசக்தி சித்தர் பீடத்தில் நேற்று, பத்தாம் ஆண்டு ஆடி அமாவாசை பாலகுட ஊர்வலம் மற்றும் தேர்த் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.