பதிவு செய்த நாள்
28
ஜூலை
2017
12:07
வத்திராயிருப்பு, நவக்கிரஹங்களில் உள்ள ராகுபகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் நேற்று காலை 11:40 மணிக்கு இடப்பெயர்ச்சியாயினர். இதையொட்டி கூமாப்பட்டியில் உள்ள தேவிகருமாரியம்மன் கோயிலில் அதிகாலையில் அம்மனுக்கும், நவக்கிரஹங்களில் உள்ள ராகுபகவானுக்கும், கேதுபகவானுக்கும் 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் நவதானிய படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இடப்பெயர்ச்சியால் பாதிப்பிற்குள்ளாகும் மகரம், மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. அந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டனர். இதேபோல் மறைமுக பாதிப்பிற்குள்ளாகும் மற்ற ராசிகளை சேர்ந்தவர்களுக்கு பரிகாரம் செய்யப்பட்டது. பாதிப்பிலிருந்து விடுதலை பெறும் சிம்மம், கும்ப ராசிகளை சேர்ந்தவர்களுக்கு நிவர்த்தி அர்ச்சனைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தசபா செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் திருப்பதி, நிர்வாகி நடராஜன் ஏற்பாடு செய்தனர். வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் நடந்த ராகு, கேது பெயர்ச்சி விழாவில் இருதெய்வங்களுக்கும் காலையில் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், பாதிப்பிற்குள்ளான ராசியினருக்கு சிறப்பு அர்ச்சனைகளும், வழிபாடும் நடந்தது. மூவரைவென்றான் மரகதவல்லி சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் நடந்த விழாவில் ராகு, கேது, பகவான்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் நடந்தது.