திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூ.3 கோடியில் ராஜகோபுரம் கட்டப்படும் என பரம்பரை தர்க்கார் தெரிவித்தார். திண்டுக்கலில் உள்ள கோட்டைமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி உற்சவத்தை யொட்டி ஐந்து நாட்கள் விழா நடக்கிறது. அம்பாள் வலம் வரும்போது தெருக்களில் தீபாராதனை, திருக்கண் மண்டகப்படி நடத்தப்படுகிறது. ஆடி வெள்ளியன்று கோயிலில் பெண்கள் கூட்டம் அதிகளவு உள்ளதால் வெள்ளி தோறும் 100க்கும் மேற்பட்ட போலீசாரும், மப்டியில் பெண் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகை அணிந்து வரும் பெண்களின் பாதுகாப்பிற்கென நகை மற்றும் ஜாக்கெட்டுடன் இணைத்து கொள்ள வசதியாக ஊசி வழங்கப்பட்டு வருகிறது. கோயில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் கூறுகையில்: கோட்டை மாரியம்மன் கோயில் நுழைவு வாயிலில் ராஜகோபுரம் ரூ.3 கோடியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி வரைபடம் தயார் செய்து இந்து அறநிலையத்துறை அனுமதிக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் ராஜகோபுரம் பணிகள் துவங்கம். திருமண மண்டபத்தில் விருந்து நடத்துவதற்கு போதிய வசதி இல்லை. விருந்து கூடம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்க அனுமதி கோரியுள்ளோம், என்றார்.