பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
02:07
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தேவையான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா வருகிற ஆக.25-ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் கள்ளக்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் மிக ஆர்வத்துடன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்படுவதால், இப்பகுதியில் 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்படுவது வழக்கம். அதனையொட்டி தச்சூர் பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கிழங்கு மாவு, பேப்பர் பவுடர், கல்நார் போன்ற பொருட்கள் மூலமாக, வாட்டர் கலர் பயன்படுத்தி, பாகுபலி, ஜல்லிக்கட்டு, ஏர்கலப்பை கொண்ட விவசாய கணபதி, தர்பார் கணபதி, சிவன் பார்வதியுடனான கணபதி போன்ற 60க்கும் மேற்பட்ட வடிவில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றது.