பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
02:07
ராசிபுரம்: கொல்லிமலை, எட்டுக்கை அம்மன் கோவில் ஓய்வு கட்டடம், பயன்பாட்டுக்கு வராமல் பூட்டப்பட்டுள்ளதால், பக்தர்கள் மற்றும் பயணிகள் அவதிப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை ஊராட்சி ஒன்றியம், அரியூர்நாடு பஞ்சாயத்தில், பிரசித்தி பெற்ற எட்டுக்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு, தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு, அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலையில், சுற்றுலா மேம்பாட்டு திட்டப்பணியின் கீழ், 2008-09களில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில், ஓய்வு கட்டடம் கட்டப்பட்டது. இதனால், பக்தர்கள் மற்றும் பயணிகள் எட்டுக்கை அம்மனை தரிசனம் செய்த பின்னர், ஓய்வு எடுத்து வந்தனர். தற்போது, இந்த கட்டடம் பூட்டிக் கிடக்கிறது. இதனால், கோவிலுக்கும் வரும் பக்தர்கள் மற்றும் பயணிகள் ஓய்வு எடுக்க மரத்தடியில் அமர்கின்றனர். பக்தர்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி, ஓய்வு கட்டடத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.