பதிவு செய்த நாள்
01
ஆக
2017
12:08
காஞ்சியில் பிறந்து வளர்ந்த, போதி தர்மருக்கு, தமிழகத்திலேயே, காஞ்சிபுரத்தில் தான் முதன் முறையாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சியை ஆட்சி செய்த, சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னரின், மூன்றாவது மகனாக பிறந்தவர் போதி தர்மர், என, கருதப்படுகிறது. இவரின் இயற்பெயர் புத்தவர்மன்.
அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசி குழந்தையை புத்தமதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே, பல்லவ மன்னன் கந்தவர்மன் தனது மகன் போதி தர்மனை குருகுல வாழ்க்கைக்காக, காஞ்சியில் தங்கி, பவுத்த சிந்தனைகளைப் பரப்பி வந்த, பிரக்ஞதாரர் என்ற சமய குருவிடம் சேர்த்தார். போதி தர்மரும், காஞ்சிபுரத்திலிருந்த படியே, களரி, வர்மம் போன்ற கலைகளை கற்றார். கி.பி., 6ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து, கடல் வழியாக, சீனாவுக்கு சென்றார். அங்கு, ஷாவ்லின் ஆலயத்தில் தங்கியிருந்து, ஜென் பவுத்தம் என்ற, தியான வழிபாட்டு மரபை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. காஞ்சிக்கு பெருமை சேர்த்த போதி தர்மருக்கு, தமிழகத்திலேயே முதன் முறையாக, காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து, வையாவூர் செல்லும் ரோட்டில், காமாட்சியம்மன் நகரில், 1 ஏக்கரில், போதி தர்மர் புத்த விஹார், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இங்கு, போதி எனப்படும், அரச மரத்தடியில், 3 அடி உயரத்தில், புத்தர் அமர்ந்த நிலையில் உள்ள, பவுத்த ஸ்துாபாவும், புத்தர் கோவிலில், 2 அடி உயரத்தில், நின்ற நிலையில், புத்தர் சிலையும் உள்ளது. வளாகத்திற்குள், 11 அடி உயர பீடத்தில், 4.5அடி உயரத்தில், நின்ற நிலையில், போதி தர்மர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. புத்த துறவிகள் தங்குவதற்கு, பிக்கு நிவாஸும் உள்ளது.
எப்போது திறந்திருக்கும்?: காலை, 7:00 முதல், காலை, 10:00 மணி வரை மாலை, 4:00 முதல், இரவு, 7:00 மணி வரை ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் முழு நாளும் திறந்திருக்கும்.
பூஜை முறை: புத்தருக்கு நெய் தீபம், மெழுகுவர்த்தி, ஊதுவர்த்தி ஏற்றி, பாதத்தில் மலர்கள் துாவி வணங்குகின்றனர்.
– நமது நிருபர் –