சின்னமனூர்: குச்சனூர் கோயிலில் நடந்த சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேனிமாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா ஜூலை 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு ,உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மணமேடை ஏற்றப்பட்டார். நீலாதேவியாக பாவிக்கப்படும் கும்ப தேங்காய்க்கு தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து, திருமாங்கல்யம் சூட்டினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று 3வது ஆடி சனிவாரத் திருவிழா நடக்கிறது. இரவு நடை அடைக்கப்பட்ட பின், மூலவர் மீது சாத்தப்பட்டுள்ள மஞ்சள் காப்பு களையப்படும். சுயம்பு மூலவருக்கு அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுப்பதற்காக நல்லெண்ணை பூசி தூய்மைப்படுத்தி, மூலிகை மஞ்சள் காப்பு சாத்தப்படும். இதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பே மஞ்சள், படிகாரம், நல்லெண்ணை, மூலிகைகள் சேர்க்கப்பட்ட கலவை தயார் நிலையில் உள்ளது. தலைமை அர்ச்சகருக்கு துணையாக உதவி அர்ச்சகர்கள் சிவக்குமார், கோபிநாத், முத்துக்கண்ணன் இரவு முழுவதும் இந்த திருப்பணியில் ஈடுபடுவர். ஆண்டு முழுவதும் மூலவர் மீது பாதுகாப்பாக மஞ்சள் காப்பு இருப்பதற்காக, அவ்வப்போது நல்லெண்ணை பூசப்படும்.