பதிவு செய்த நாள்
07
ஆக
2017
02:08
காஞ்சிபுரம்:ஆடி மாத, மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன்கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆடி மாதத்தின், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடித்திருவிழா நடந்தது.விழாவையொட்டி, அம்மன் கரகம் கொண்டு வருதல், சிலம்பாட்டம், பம்பை உடுக்கை, வாத்திய கலைஞர்களின் இசை முழங்க, கும்பம் படைத்தல் என, அம்மன் கோவில்களில் ஆடி உற்சவம் களை கட்டியது. அதேப்போன்று, வீடுகளிலும் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடந்தது.
காஞ்சிபுரம், வைகுண்டபுரம், மதங்கீஸ்வரர் கோவில் தெருவில், கருக்கினில் அமர்ந்தவள் அம்மனுக்கும், 34ம் ஆண்டு ஆடித்திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 4ம் தேதி, கருக்கினில் அமர்ந்தவள் கோவிலுக்கு சென்று சக்தி கரகம் கொண்டு வரப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவிலில்,பக்தர்கள் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் அம்மனுக்கு படையலிட்டனர். சிறுவர்கள், பெரியவர்கள் ஆகியோர், வேப்பம் இலைகளாலான ஆடையை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெரிய காஞ்சிபுரம், சங்குபாணி விநாயகர் கோவில் தெருவில் உள்ள, கோயிலாத்தம்மன் கோவிலில், அம்மன் கிளி அலங்காரத்தில் வீதியுலா வந்தார். பக்தர்கள் உடலில் எலுமிச்சம் பழம் குத்தி, நேர்த்திக்கடனை செலுத்தினர். திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், பழமை வாய்ந்த பெரியபாளையத்தம்மன், பள்ளம்பாக்கம் கிராமத்தில், தேவி கருமாரியம்மன் கோவில்களில் தீமிதி விமரிசையாக நடந்தது. அதேபோல் உத்திரமேரூர், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில், அம்மன் கோவில்களில் ஆடி விழா கோலாகலமாக நடந்தது.