பதிவு செய்த நாள்
08
ஆக
2017
02:08
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே, விமான நிலையம் அமைக்க, இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இங்குள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்காக, சபரிமலை அருகே, விமான நிலையம் அமைக்க, முடிவு செய்யப்பட்டது; அரண்முலா பகுதியில் விமான நிலையம் கட்ட, கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால், வனப்பகுதியில் விமான நிலையம் அமைக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வேறு இடத்தை தேர்வு செய்ய, மாநில அரசு, குழு அமைத்தது; அக்குழு தற்போது இடத்தை தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து கேரள சட்டசபையில், முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: சபரிமலையில் இருந்து, 48 கி.மீ., தொலைவில் உள்ள செருவெள்ளி எஸ்டேட்டில், விமான நிலையம் கட்ட, தேர்வு குழு இடத்தை தேர்வு செய்துள்ளது; இதுபற்றி, சம்பந்தப்பட்ட துறைகளுடன் விவாதித்து, விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும். எனினும், இந்த இடம் தொடர்பாக, கேரள ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதுபற்றியும் ஆலோசனை செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.