பதிவு செய்த நாள்
08
ஆக
2017
03:08
புராணங்களின்படி, தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது, அனைத்து லோகங்களையும் அழிக்கவல்ல ஆலகால விஷம் என்கிற கொடிய விஷம் வந்தது. வேறு வழியில்லாததால், அனைவரும் சிவபெருமானை சரணடைந்து, அனைத்து லோகங்களையும் இப்பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டினர். சிவபெருமானும், தான் இக்கொடிய விஷத்தை தான் அருந்தி இவ்வுலகத்தைக் காப்பேன் என தன் மனைவி பார்வதியிடம் கூறினார்.
அப்போது ராஜா பரிக்ஷித் சுக முனிவரிடம், ஒரு மனைவியால் எப்படி தன் கணவனை விஷத்தை அருந்த அனுமதிக்க முடியும்? பார்வதி தேவி அதற்கு எப்படி சம்மதம் தெரிவித்தார்? என்று கேட்டார். அதற்கு சுக முனிவர், குடிக்கப் போகும் பொருள் விஷம்; அதனைக் குடிக்கப் போகுபவர் பரமசிவன். சர்வ மங்கள தேவியான பார்வதி தேவி தனது கணவன் சிவபெருமான் கட்டிய மாங்கல்யத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தாள்.
சர்வ மங்களா என்ற சொல், சிருஷ்டியின் அனைத்துப் சுப காரியங்களையும் ஊக்குவிக்கும், அருள் கொடுக்கும் (பெண்) தேவி என்று பொருள். சிவபெருமான் அபலா ஆவார். அவருக்கும் பிறப்பும் மற்றும் இறப்பில்லை. அவர் சுயம்பு ஆவார். அழிவில்லாதவர். பார்வதி தேவி சர்வ மங்களா லோகமாதா அவதேத உமா (உலகத்தை காப்பாற்றுபவள்) ஆவார். பிரளய காலத்திலும் அவர்களுக்கு எந்த துரிதமும் ஏற்படாது.
காமேஸ பத்த மாங்கல்ய சூத்ர ஷோபிதகந்தரா என்று லலிதா சஹஸ்ர நாமம் ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, பார்வதி தேவியின் கழுத்தில் சிவபெருமான் பவித்ர மாங்கல்யத்தை (தாலியை) கட்டியிருப்பதால் தேவியுடைய கழுத்து தெய்வீகமாகக் காட்சியளிக்கின்றது. அந்த மாங்கல்யத்தின் மீதுள்ள நம்பிக்கையால்தான் தேவி எம்பெருமானை அக்கொடிய விஷத்தை அருந்த அனுமதித்தார்.
ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் இருந்து மஞ்சள், கும்குமத்தைப் பெற்றால் அவள் முதலில் அதனைத் தன்னுடைய மாங்கல்யத்தில் அணிந்த பிறகு தான் நெற்றியில் அணிவாள். அச்செயலால் அவளது கணவனின் ஆயுள் வளரும் என்று சொல்லப்படுகிறது. எம்பெருமானும், பெரிய சுமங்கலியாக லோக ஜனனி அன்னை பார்வதியும், உலகைக் காக்கும் பொருட்டும், மாங்கல்ய பலத்தைக் காட்டும் பொருட்டும், எம்பெருமான் ஆலகால விஷத்தை அருந்தினார்.
எம்பெருமான் அருந்திய இந் நிகழ்ச்சி மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி இரவு அன்று நடைபெற்று, உலகம் அனைத்தும் காப்பாற்றப்பட்டதால், சிவராத்திரி என்று அந்நாளை கூறுவர். எம்பெருமான் உலகை காப்பாற்றி இருந்தாலும், பார்வதி தேவி மாங்கல்யம் தான் உலகைக் காப்பாற்றியது என்ற உட்பொருளை சிவராத்திரி நமக்கு தெரிவிக்கிறது. உலகம் பிரளயத்தால் அழியும்போது சிவபெருமான் மட்டும்தான் அங்கிருப்பார். அது பார்வதி தேவி மாங்கல்யத்தின் சக்தியால் தான் என்று ஜகத்குரு சங்கராசாரியார் தனது சவுந்தர்ய லஹரியில் கூறியுள்ளார். தெலுங்கு கவி பம்மேர போதன தனது பாகவதத்தில் மாங்கல்ய பலத்தைப் பற்றி 8வது ஸ்கந்தம் 241 ஆம் பாட்டில் கூறியுள்ளார்.