காரமடை: ""காரமடை அரங்கநாதர் கோவிலில் 86.50 லட்சம் ரூபாயில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் கோபுரம் அமைக்கும் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். காரமடை அரங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி கடந்த ஏழு ஆண்டுக்கு முன்பு துவங்கியது. பல்வேறு காரணங்களால் கட்டுமானப்பணியில் தொய்வு ஏற்பட்டு சில ஆண்டுகளாக வேலைகள் செய்யாமல் இருந்தன. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றதும், பழைய ஸ்தபதிகளை மாற்றிவிட்டு, புதிய ஸ்தபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கோபுரம் கட்டுமானப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், மேலாளர் ராமராஜன் ஆகியோர் கூறியதாவது: காரமடை அரங்கநாதர் கோவில் 7 நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 14 அடிக்கு அஸ்திவாரம் தோண்டி கான்கிரிட் போடப்பட்டுள்ளது. 24 அடிக்கு கல்கார கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 55.5 அடிக்கு ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முதல் நிலை செங்கல் கட்டடம் முடிந்து கான்கிரிட் போட முட்டு அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிலைக்கும் உள்பகுதியில் பீம் கொடுத்து கான்கிரிட் போடப்படும். அடுத்தாண்டு மார்ச்சில் ஏழு நிலை கோபுரம் முழுமையாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு பூச்சு வேலைகளும், சிலைகள் அமைக்கும் பணிகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு நடைபெறும். மொத்தம் 86.50 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கோபுரம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. நன்கொடை கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கோவில் செயல் அலுவலரை சந்திக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.