பதிவு செய்த நாள்
26
நவ
2011
11:11
சபரிமலை : அவசர கால சேவைக்காக, பம்பையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரோட்டை, கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று திறந்து வைக்கிறார். சபரிமலையில் விபத்துகள் ஏற்படும் போது பாதிக்கப்பட்டவர்களை பத்தணந்திட்டை, கோட்டயம் மருத்துவக் கல்லூரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். பம்பை மணல் பரப்பில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால், காயம்பட்டவர்களை விரைவாக கொண்டு செல்வதில், சிரமம் இருந்து வந்தது. இதைப் போக்க, அவசர கால சேவைக்காக, அய்யப்பா சேவா சங்கம் சார்பில், ஒரு கோடி ரூபாய் செலவில் இங்கு புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, இன்று காலை 9.30 மணிக்கு பம்பையில் நடைபெறுகிறது. அய்யப்பா சேவா சங்க தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை தலைமை வகிக்கிறார். கேரள முதல்வர் உம்மன் சாண்டி, புதிய ரோட்டை திறந்து வைக்கிறார். இதில், தேவசம் போர்டு அமைச்சர் சிவகுமார், தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
பஸ் சர்வீஸ்: பம்பையில் இருந்து கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தமிழகத்தில் தென்காசி, பழனி, கோவை ஆகிய இடங்களுக்கு பஸ் போக்குவரத்தைத் துவக்கியது. தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், பம்பைக்கு பஸ் சர்வீஸ் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், பம்பைக்கு ஆன்-லைன் புக்கிங் வசதி செய்யப்பட இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.