ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக. 15 ல் துவங்குவதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. கோயில் கருவறையில் மேல் மண்டபம் அமைந்துள்ள நிலையிலும் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபட்டு வருவதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறுகின்றன. அதன்படி ஆக.15 மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் வழிபாடுடன் சதுர்த்தி விழா துவங்குகிறது. அதைத் தொடர்ந்து மறுநாள் காலை 10:15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் தொடர்ச்சியாக தினமும் மாலையில் வெள்ளி மூஷிக, கேடகம், சிம்ம, மயில், யானை, ரிஷப, காமதேனு, குதிரை, சிம்ம உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி உலா வருகிறார். முக்கிய விழாவான விநாயகர் திருக்கல்யாணம் ஆக.23 லும், மறுநாள் தேர்வடம் பிடித்தலும் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான ஆக.25 சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.