பதிவு செய்த நாள்
14
ஆக
2017
02:08
சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள், கிருஷ்ணர் அவதார திருநாள். இந்த நாள், கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. சென்னை, சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், இன்று மாலை, 3:00 மணிக்கு, கிருஷ்ண யாகம் நடத்தப்படுகிறது. மேலும் ஆக., 15ல், காலை முதல் நள்ளிரவு வரை சிறப்பு தரிசனம் நடக்கிறது. இரவு, 10:30 மணி முதல் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி கோவிலில், கடந்த மாதம் முதல், தினமும் கச்சேரிகள், உபன்யாசங்கள் நடந்து வருகின்றன. இங்கு, இன்று இரவு, 7:30 மணிக்கு, தாமல் ராமகிருஷ்ணனின், கிருஷ்ண ஜனனம் சொற்பொழிவு நடக்கிறது. மேலும், முத்தங்கி சேவை அலங்காரத்துடன் சுவாமி அருள்பாலிக்கிறார். சென்னை, மயிலாப்பூர், நந்தலாலாவில், இன்று மாலை, கிருஷ்ண ஜனன வைபவம் நடக்கிறது. நாளை, அமிர்தம் கடைதல், குசேலர் வைபவம், உறியடி உற்சவம் நடக்கிறது.