பதிவு செய்த நாள்
14
ஆக
2017
02:08
கோவை : கோவை சுண்டக்காமுத்துார் ரோட்டில் உள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கிணற்றை துார்வாரி, சுத்தம் செய்யும் பணி நேற்று நிறைவடைந்தது. கோவையில் நொய்யல் ஆறு, குளங்கள், கால்வாய், அணைக்கட்டு, பழ மையான கிணறு, பாரம்பரிய சின்னங்களாக உள்ள பகுதிகளை, குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று, இரண்டு மணி நேரம் ஒதுக்கி, சுத்தம் செய்து வருகின்றனர். இவர்களது பணியை பார்த்த, சமூக ஆர்வலர்கள் ஒவ்வொரு வாரமும் கைகோர்க்க ஆரம்பித்தனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி மற்றும் விழிப்புணர்வு காரணமாக, ஒவ்வொரு வாரமும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது; மாநகராட்சி நிர்வாகமும் தேவையான வசதி செய்து கொடுத்தது. பேரூர் குளத்தில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டன. குப்பையில் வீசப்பட்டிருந்த தபால்கள் மீட்கப்பட்டு, தபால் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.
பின், செல்வசிந்தாமணி குளம், வெள்ளலுார் தடுப்பணை, குனியமுத்துார் தடுப்பணை, செங்குளம், கோயமுத்துார் தடுப்பணை, சுண்டக்காமுத்துார் ரோட்டில் உள்ள, 400 ஆண்டு பழமையான கிணறு, மண் மேவியும், செடி கொடிகள் முளைத்து, முட்புதராக மூடிக்கிடந்தது. எட்டு வாரங்களாக இக்கிணற்றை சுத்தம் செய்யும் பணியில், இளைஞர்கள் ஈடுபட்டனர். கிணற்றின் பக்கச்சுவரில் அரிய சிற்பங்கள் தென்படுவதால், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, வேலி அமைத்து பாதுகாக்க, குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் முறையிட்டனர். அதையேற்று, உயரதிகாரிகளுக்கு தொல்லியல் துறையினர் கடிதம் அனுப்பி உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது: குளங்கள், தடுப்பணை, கால்வாய், கிணறு துார்வாரி, சுத்தம் செய்தல் என, 27 வாரங்கள் களப்பணி மேற்கொண்டுள்ளோம். இரண்டு தலைமுறை பார்க்காத பழமையான கிணற்றை கண்டுபிடித்து, துார்வாரி சுத்தப்படுத்தியுள்ளோம். கடந்த எட்டு வாரங்களில், ஆயிரம் மனித சக்திகளின் உழைப்பால், கிணறு மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. மழைப்பொழிவு குறைவாக இருப்பதால், அடுத்தடுத்த வாரங்களில் மரக்கன்று நடவு செய்ய முடிவு செய்திருக்கிறோம். முதல்கட்டமாக, பனை விதை புதைக்கப்படும். துார்வாரி சுத்தப்படுத்திய பழமையான கிணற்றை சுற்றிலும், பாதுகாப்பு வேலி அமைக்கவும், மரக்கன்று நடவுக்கு தேவையான பாதுகாப்பு வளையம் வாங்கவும் ஸ்பான்சர் தேடிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.