பதிவு செய்த நாள்
28
நவ
2011
12:11
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடக்கும் பல்வேறு பணிகளை கலெக்டர் ஜெயஸ்ரீ நேற்று ஆய்வு செய்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில், 2 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில், கோவில் வெளிப்பிரகாரம் விரிவுப்படுத்தும் பணி மற்றும் 6 கோடியே 10 லட்ச ரூபாய் செலவில், பக்தர்கள் தங்கும் அமாவாசை மற்றும் பௌர்ணமி மண்டபம் கட்டும் பணி, பஸ்ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். முடிகொட்டகை பகுதியில் சுத்தமின்றி, சிதறிக்கிடந்த முடிகளை உடனுக்குடன் அகற்ற உத்தரவிட்டார். பஸ்ஸ்டாண்ட்டில் பூட்டிகிடந்த கழிவறைகளை பக்தர்களின் வசதிக்காக உடனடியாக திறக்கும்படி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோவில் வளாகத்தை சுற்றி அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைக்கூட்டம், மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். எஸ்.பி., லலிதாலட்சுமி, மணச்சநல்லூர் எம்.எல்.ஏ., பூனாட்சி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், தங்க பாதுகாப்பான இட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, அடிப்படை வசதிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். திருவிழாக்கள், அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில், தேரடி முதல் கோவில் வரை வரிசையாக பக்தர்கள் செல்ல ஏதுவாக தடுப்புகள் அமைக்க வேண்டும். ஸ்வாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு, "சி.சி.டி.வி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்தல் உட்பட பல்வேறு பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. கோவில் இணை கமிஷனர் பொன்செல்வராஜ், மணச்சநல்லூர் யூனியன் சேர்மன் பரமேஸ்வரி, ஆர்.டி.ஓ., ஜெயஷீலா, எஸ்.கண்ணனூர் டவுன் பஞ்., தலைவர் அம்சவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.