ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி மடத்துவிளை தூய சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆறுமுகநேரி மடத்துவிளையில் தூய சவேரியார் ஆலயம் உள்ளது. இங்கு தூய சவேரியார் திருவிழா 24ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு 24ம் தேதி மாலை கொடியேற்று விழா நடந்தது. பங்குதந்தை இருதயராஜ், ஆரோக்கியதாஸ் ஆகியோர் மறையுரை நிகழ்த்தினர். திருவிழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு பாடற்திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா தினமான வரும் 3ம் தேதி காலை முதல் திருப்பலியும், 7.15 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடக்கும். அன்றையதினம் இரவு புனித சவேரியார் உருவ கப்பல் சப்பர பவனி நடக்கும். ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் ரூபர்ட் அருள்வளன், இருதயராஜ் மற்றும் ஊர்கமிட்டி தலைவர் அமிர்தம் பர்னாந்து ஆகியோர் செய்து வருகின்றனர்.