திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலை திருக்குளத்தில் நடந்த தீர்த்தவாரியை பக்தர்கள் தரிசித்தனர். மதியம் மூலவருக்கு முக்குறுணி மோதகம் படையலிடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா ஆக.16ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம், மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுஅதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மூலவர் தங்க கவச தரிசனம் துவங்கியது.
பின்னர் காலை 9:30 மணிக்கு தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கோயிலை வலம் வந்து, குளத்தின் தெற்கு கரையில் எழுந்தருளினார். தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார்,தலைமையில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க அங்குசத் தேவருக்கு படித் துறையில் அபிேஷக, ஆராதனை நடந்தன. பின்னர் சோமசுந்தர குருக்கள் அங்குசத்தேவருடன் குளத்தில் காலை 10:10 மணி அளவில் மூன்று முறை மூழ்கி தீர்த்தவாரி நடத்தினார். உற்சவருக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தங்கக் கவசத்தில் மூலவரை பக்தர்கள் தரிசித்தனர். மதியம் 2:00 மணிக்கு மூலவருக்கு ’மெகா’ கொழுக்கட்டையான முக்குறுணி மோதகம் படையலிடப்பட்டதை பக்தர்கள் தரிசித்தனர். இரவில் சுவாமிகள் வாகனங்களில் திருவீதி வலம் வந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து விநாயகரை தரிசித்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நற்சாந்துபட்டி பெரியகருப்பன், காரைக்குடி நாராயணன் செய்தனர்.