பதிவு செய்த நாள்
30
நவ
2011
12:11
ஈரோடு : பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை, "வேதநாயகி உடல் எடையால் அவதிப்படுவதாகவும், வாக்கிங் அழைத்து செல்ல வேண்டும் என, கோவில் நிர்வாகத்துக்கு, வனத்துறையினர் அறிவுரை வழங்கினர். பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 1980 முதல், "வேதநாயகி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. விழாக்களின் போது, யானை "வேதநாயகி முன் செல்ல, அதன் பிறகே ஸ்வாமி திருவீதி உலா நடப்பது வழக்கம். "வேதநாயகிக்கு தினமும் காலை நல்லெண்ணெய், மிளகு கலந்த மூன்று கிலோ வெண் பொங்கல், மாலை மூன்று மணிக்கு பச்சை பயறு, கொள்ளு கலந்த கலவையாக மூன்று கிலோ உணவு, 70 கட்டு சோளத்தட்டு ஆகியவை உணவாக வழங்கப்படுகிறது. தற்போது, 35 வயதான "வேதநாயகி, கால் நகத்தில் ஏற்பட்ட வெடிப்பு, முன் முழங்காலில் ஏற்பட்ட புண்ணால் அவதிப்படுகிறது. பெரும்பாலான பூஜையில் பங்கேற்பது தவிர்க்கப்படுகிறது. யானையின் உடல் நிலையை ஆய்வு செய்யுமாறு, வனத்துறையினருக்கு, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுபற்றிய செய்தி, "காலைக்கதிர் நாளிதழில் வெளியானது. இதனடிப்படையில், நேற்று மண்டல வனப்பாதுகாவலர் அருண், மாவட்ட வன அலுவலர் ஜெகந்நாதன் ஆகியோர் தலைமையில், கோவில் யானை வேதநாயகியை, கோவை டாக்டர் மனோகரன் பரிசோதித்தார். அவர் கூறுகையில், ""பொதுவாக பெண் யானை, மூன்றரை முதல் நான்கு டன் எடை கொண்டதாக இருக்கும். ஆனால், "வேதநாயகி தற்போது, 4.5 டன் எடை உள்ளது. யானை பராமரிக்கும் இடத்தில் சிமென்ட் தரைகள் பெயர்ந்தும், உடைந்தும் இருப்பதால், யானைக்கு கால் நகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. கால்களுக்கு வெளியே நகம் நீண்டுள்ளதால், நகத்தில் வெடிப்பும், முழங்காலில் புண்ணும் ஏற்பட்டுள்ளது. எனவே, கோவில் யானையை "வாக்கிங் அழைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது, என்றார். மண்டல வனப் பாதுகாவலர் அருண் கூறுகையில், ""சிமென்ட் தரையில் இருந்து, செம்மண் தரைக்கு யானையை மாற்ற நடவடிக்கை எடுக்க, கோவில் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ஒரே மாதிரியான உணவை கொடுக்காமல், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரங்களின் இலைகளை யானைக்கு உணவாக கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. யானையின் கால் நகங்களை தேய்த்து, அதில் மருந்து வைக்கவும், வெட்ட வெளியில் யானையை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.