800 ஆண்டு கால சிவன் கோயிலில் செப். 3 ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2017 01:08
சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையிலுள்ள 800 ஆண்டு பழமையான கரிகால சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் செப்., 3 ல் நடக்கிறது.காவிரிக்கு கரை அமைத்த கரிகால சோழன் சிவ பூஜை செய்த பின்பே எந்த காரியமும் செய்வார். அவர் பல நுாறு ஆண்டுகளுக்கு முன் வேட்டைக்காக தெற்கு நோக்கி நெடுந்துாரம் பயணித்தார். தனது நாட்டிற்கு உடனடியாக திரும்ப முடியாத நிலையில் குடில் அமைத்து தங்கினார். இதனால் சிவபூஜை செய்ய முடியவில்லை. அவரது கனவில் தோன்றிய சிவன், ’தான் அதே பகுதியில் இருப்பதாக’ கூறி மறைந்தார். சுவாமி இருக்கும் இடத்தை கண்டறிய வீரர்களுக்கு உத்தரவிட்டார் கரிகாலன். வீரர்கள் தேடிச் சென்றபோது தாமரைக்குளம் தென்பட்டது. அதனருகே லிங்கமும் இருந்தது. அங்கையை சிவ பூஜையை கரிகாலன் நடத்திவிட்டு, நாட்டிற்கு திரும்பினார். அவர் பிரதிஷ்டை செய்த மூர்த்தி என்பதால், கரிகால சோழீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அதனருகே உள்ள குளத்தை வீரர்கள் கண்டதால் வீரகண்டான் குளம் என கூறப்படுகிறது. பழமையான இக்கோயில் திருப்பணியை நாட்டரசன்கோட்டை நகரத்தார் செய்தனர். 15 ஆண்டுகளுக்கு பின் செப்., 3 ல் கும்பாபிேஷகம் நடக்கிறது. ஆக., 27 கணபதி பிரார்த்தனையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. ஆக., 31 முதல் யாக சாலை பூஜை துவங்குகிறது. காலை 10:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான அலுவலர்கள், நகரத்தார்கள் மேற்கொள்கின்றனர்.