பதிவு செய்த நாள்
30
ஆக
2017
01:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று, 150க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, 25ல், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 1,762 விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அறிவுறுத்தல் படி, முதல் நாளில், 82 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இரண்டாவது நாளில், பத்து சிலைகளும், 27ல், 1,352 சிலைகளும் கரைக்கப்பட்டன. நேற்று, கிருஷ்ணகிரியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகளை கே.ஆர்.பி.,அணையில் கரைக்க மேள, தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த ஊர்வலம், கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இருந்து காந்தி சாலை வழியாக கே.ஆர்.பி., அணைக்கு சென்றது. அங்கு, 96 விநாயகர் சிலைகளை கரைத்தனர். இதையொட்டி, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல், ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், விநாயகர் சதுர்த்தியின் போது வைக்கப்பட்ட, 600 க்கும் மேற்பட்ட சிலைகள், மூன்றாம் நாளான, 27ல் கரைக்கப்பட்டன. ஐந்தாம் நாளான நேற்று, தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள மதகொண்டப்பள்ளி, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த, 44 விநாயகர் சிலைகள், ஆங்காங்கு உள்ள நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சங்கர் தலைமையில், 240 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஓசூர் உட்கோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள, 69 விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்படுகின்றன. இதற்காக, 470 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.