பதிவு செய்த நாள்
31
ஆக
2017
05:08
கோபி: பாண்டவர்கள் தாகம் தணித்த, 5,000 ஆண்டுகள் பழமையான, மத்தாளக்கோம்பு ஊற்று நீர் குளம், வறண்டுபோயுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே, டி.என்.,பாளையம் செல்லும் வழியில், வயல்வெளி நடுவே, மத்தாளக்கோம்பு விநாயகர் கோவில் உள்ளது. பவானி ஆற்றங்கரையோரம் உள்ள இதன் அருகே, புனித நீர் ஊற்று உள்ளது. இதை சுற்றிலும், படிக்கட்டு அமைத்து, முன்னோர்கள் குளமாக மாற்றினர். இதில் பெருக்கெடுத்த ஊற்று நீர், அக்னி தீர்த்தம், ருத்ர தீர்த்தம் எனக் கூறப்பட்டது.
கங்கைக்கு சமமாக கருதப்படும், இக்குளத்தில் குளிப்பவர்கள், சிவனை முழு முதற்கடவுளாக ஏற்கிறார்கள் என்பது ஐதீகம். சதுர வடிவில் ஆறு படிக்கட்டுகளை உள்ளடக்கிய குளத்தில், இரண்டாவது படிக்கட்டு அருகே வெளியேறும் உபரிநீர், பவானி ஆற்றை அடையும் வகையில் கட்டப்பட்டுள்ளது. குளத்தில் பெண்கள் குளிக்க கூடாது என்பது ஐதீகம். கட்டுப்பாடுகளை கடைபிடித்ததால், குளத்தின் அடி மணற்பரப்பு தெரியும் வகையில், தண்ணீர் கண்ணாடி போல் இருந்தது. புனித நீரை, அதிகளவில், அபிேஷகம், கும்பாபிேஷகம், கலச பூஜை, உள்ளிட்ட நிகழ்வுக்கு பயன்படுத்தினர். இந்தக்குளத்தில், கடந்த ஏப்., முதல், ஊற்றெடுப்பது குறையத் தொடங்கியது. தற்போது அறவே ஊற்றெடுக்காமல் வறண்டு விட்டது. இதனால் கோவில் விஷேசங்களுக்கு, தீர்த்தம் எடுக்க, புனிதநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் பூசாரி சண்முகம் கூறியதாவது: நாங்கள் ஐந்தாவது தலைமுறையாக, பூஜை செய்கிறோம். இக்குளம் 5,000 ஆண்டுகள் பழமையானது. மகாபாரதம் தோன்றிய காலத்தில், இவ்வழியாக சென்ற பாண்டவர்களுக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது பீமன், தண்டாயுதத்தால், நிலத்தில் அடித்ததில், இங்கு புனித நீர் கொப்பளித்ததாக வரலாறு உள்ளது. எந்த காலத்திலும் குளம் வற்றியதில்லை. ஆழ்துளை கிணறுகள் அதிகரிப்பு, மழையின்மையால் வறண்டு விட்டது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் கோவில் விழாக்களுக்கும், புனித நீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.