திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், திருவோணத்தை முன்னிட்டு இன்று வாமன ஜெயந்தி விழா நடக்கிறது. மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்து பின்னர் உலகளந்த பெருமாளாக விஸ்வரூபம் எடுத்தார். வாமன அவதாரம் என்னும் குள்ள வடிவனாக காட்சியளித்த அதேநாளில் திருவிக்கிரம அவதாரம் எனும் உயர்ந்தவராகவம் காட்சியளித்தார். நானே குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாகவும் இருக்கிறேன் என்பது வாமன அவதாரம். நானே இப்பூமியில் எல்லாமாகவும் இருக்கிறேன் என்பது திருவிக்ரம அவதார தத்துவம். இதனை விளக்கும் வகையில் திருக்கோவிலுார் பெருமாள் கோவிலில் மூலவராக இருக்கும் உலகளந்த பெருமாள் சன்னதிக்கு பின்புறத்தில் வாமனர் சன்னதி உள்ளது. சிறப்பு வாய்ந்த ஆவணி திருவோணத்தை முன்னிட்டு இன்று( 4ம் தேதி )காலை வாமனர்க்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. மாலையில் 5:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது.