பதிவு செய்த நாள்
01
டிச
2011
12:12
திருப்பூர் : ஒவ்வொரு மொழிக்கும் வெவ்வேறு சிறப்பு இருந்தாலும், ஆன்மிக இலக்கியங்கள் அதிகமுள்ள மொழி, நம் தமிழ் மொழி மட்டுமே. தமிழக சான்றோர், நமக்கு நன்மை தரும் அனைத்தையும் கூறிச் சென்றுள்ளனர் என சொற்பொழிவாளர் சுமதி பேசினார். திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்ரீஅய்யப்பன் கோவில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
சொற்பொழிவாளர் சுமதி பேசியதாவது: உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டாலும், நம் தமிழ் மொழிக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. வணிக மொழியாக ஆங்கிலம்; காதலை சொல்ல பிரெஞ்சு, நீதி நெறிகளுக்கு லத்தீன் என்று வகைப்படுத்தினால், பக்தி இலக்கியங்கள் அதிகமுள்ள ஒரே மொழி நம் தமிழ்மொழி மட்டுமே. ஆனால், நாம் தமிழ்மொழியின் சிறப்புகளை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். ஆழ்வார்களில் சிறந்தவராக கருதப்படுபவர், திருமாழிசையாழ்வார். திருமாலே அவர்முன் தோன்றி, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்துள்ளார்.அத்தகைய சிறப்புமிக்க திருமாழிசையாழ்வார், நாராயணனை தொழுதால் நல்ல குலம், சிறந்த செல்வம், அருளுடன் கூடிய பணம் கிடைக்கும் என்பதை தனது பாசுரத்தில் தெளிவாக குறிப்பிடுகிறார். குலசேகர ஆழ்வாரோ, தன்னை தசரதனாக பாவித்து, பெருமாளை ராமனாக பாவித்து, தூய தமிழில் தாலாட்டு பாடினார். இன்றைய காலகட்டத்தில், கலாசார சீரழிவு அதிகரித்து வருகிறது. தமிழுக்கென்று, தமிழர்களுக்கென்று பண்பாடு இருக்கிறது; மற்ற மொழியினர் தங்கள் குழந்தைகளுக்கு பொருட்களை காட்டித்தான் எழுத்துக்களை அறிமுகப்படுத்துவர். நாம் மட்டும் தான், "அ அறம் செய்ய விரும்பு என்று மொழியோடு சேர்த்து பண்பையும் கற்றுக்கொடுக்கிறோம்.திருமணம் என்றால் என்ன பொருளென்று தெரியாதவர்களால், இன்று விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. பத்து பொருத்தம் பார்த்து; நவ (ஒன்பது) கிரகங்களை வணங்கி; எட்டு திசையிலும் உள்ள உறவினர்களை அழைத்து; ஏழு ஸ்வரங்கள் இசைத்து; அறுசுவை உணவு படைத்து; ஐம்பூதங்களை வணங்கி; நான்கு வேதங்கள் (ரிக், யஜூர், சாம, அதர்வணம்) ஓதி; கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு, இரு உடல் இணைந்து ஓருயிர் ஆவதே, திருமண பந்தம்; இதை புரிந்துகொண்டால், இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.தமிழகத்தில் தோன்றிய மகான்கள் நாம் சிறப்பாக வாழ்வதற்கு ஏராளமான கருத்துக்களை கூறிச் சென்றுள்ளனர். தவறுகளை திருத்திக் கொள்வதற்காக, திருவள்ளுவர் நமக்கு இரண்டு "அடி யாக திருக்குறளை கொடுத்துள்ளார். கம்பராமாயணத்தில், தாய் கைகேயி காட்டுக்கு செல்லும்படி கூறியதும் ராமன், "நும் பணி மறுப்பனோ... என்றபடி கானகம் செல்கிறார். அதாவது, மறுப்பு சொல்லாமல் இருந்தாலே பாதி பிரச்னை தீர்ந்து விடும் என்பதை இதன் மூலம் உணரலாம்.அணுவை முதன் முதலில் பிளந்தவர் கம்பர் தான். சாணிலும் உள்ளான், ஓர் அணுவை சத கூறு இட்ட கோணிலும் உள்ளான் என்று, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அணுவை பிளந்து, அதற்கு "கோண் என்று பெயரும் வைத்துவிட்டான்; அதன்பின்பே, அறிவியல் அறிஞர்கள் அணுவை பிளந்து, அதனுள் புரோட்டான், எலக்ட்ரான் இருக்கிறது என்றனர். நம் சான்றோர், தமிழோடு ஆன்மிகம், பண்பு, பண்பாடு என நமக்கு நன்மை தரும் அனைத்தையும் வழங்கிச்சென்றுள்ளனர், என்றார்.