பதிவு செய்த நாள்
18
செப்
2017
01:09
ராசிபுரம்: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால், வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதத்தில், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றியதற்கும், புதிய வேண்டுதல்களை பெருமாளிடம் தெரிவிக்கவும், ஏராளமான பொதுமக்கள் திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொள்கின்றனர். அதன்படி, நேற்று நாமக்கல் மாவட்டம், விட்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து, நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறு பேர், நாமக்கல், சேலம், அரூர், ஊத்தங்கரை, சித்தூர் வழியாக திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொண்டனர். இவர்கள், 380 கி.மீ., தொலைவை, 11 நாட்களில் கடந்து திருப்பதி அடைவர். இது குறித்து ரேகா, 32, என்பவர் கூறியதாவது: எனக்கு திருமணம் முடிந்து, ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. எங்கள் கிராமத்தில் இருந்து, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக திருப்பதிக்கு நடைபயணம் செல்கின்றனர். என்னை போலவே, ஒருவரின் நிலையும் இருந்தது. தற்போது, குழந்தை பிறந்துள்ளது. இதுதான் எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. நான் செல்வது முதல் முறை என்றாலும், எனது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என நம்பிக்கை உளளது. இவ்வாறு அவர் கூறினார்.