பதிவு செய்த நாள்
23
செப்
2017
06:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா 24ம்தேதி விடையாற்றி உற்சவமும், துவாஜா அவரோகனத்துடன் பூர்த்தியாகிறது. விழாவில் 23ம் தேதி வரை சுமார் 15 லட்சம் பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடியுள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி விடையாற்றியுடன் பூர்த்தியாகிறது. காவிரியில் புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் நீராடியப் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மகா புஷ்கரம் விழாவின் 12ம் நாளான நேறறு சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் நேற்று மட்டும் இரண் டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரிக்கரைக்கு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து, புஷ்கரத்தில் புனித நீராடினர். தொடர்ந்து தென்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காவிரித்தாயையும், இருகரைகளிலும் நடைபெறும் சிறப்பு ஹோமங்களில் கலந்துகொணடு வழிபாடு செய்து செல்கின்றனர்.
காவிரி மகா புஷ்கரம் விழாவின் 12ம் நாளில் காவிரி துலாக்கட்டத்தின் வடகரையில் மஹாருத்ர சதசண்டி ஹோமம் நடைபெற்றது. பூர்ணாஹுதியாகி அன்னபூரீஸ்வரர் சமேத அன்னப்பூரணி அம்பாள் சுவாமி காவிரிக்கரையில் எழுந்தருள, அவருக்கு ஹோமத்தில் வைத்து ஆவாகனம் செய்யப்பட்ட புனிதநீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு,தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரகாகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புஷ்கரத்தில்நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். காவிரி துலாக்கட்டத்தின் தென்கரையில் சிவபுரம் வேதாகம பாட சாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கலச பூஜைகள் நடைபெற்றது. இதில் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் பங்கேற்று வேதமந்திரங்களை ஜெபம் செய்தனர். காவிரிவடக்கு கரையில் காவிரித்தாய்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிறைவு நாளான 24ம் தேதி விடையாற்றி உற்சவமும், துவஜா அவரோகனம் (கொடிஇறக்கமும்) நடைபெறுகிறது. மயிலாடுதுறையில் கடந்த 12ம் தேதி தொடங்கிய புஷ்கரம் விழாவில் 23ம் தேதி வரை சுமார் 15 லட்சம் பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடியுள்ளனர்.