பதிவு செய்த நாள்
25
செப்
2017
01:09
திருநெல்வேலி: புரட்டாசி மாதம் முகூர்த்தம் இல்லாத நிலையிலும், நவராத்திரி பண்டிகை காரணமாக, பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில், மல்லிப்பூ விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. நெல்லை டவுன், பாளை பூ மார்க்கெட்களில், 400 - 500 ரூபாய்க்கு விற்ற, 1 கிலோ மல்லிகை பூ, மாலையில், 1,000 ரூபாயாக உயர்ந்தது. மல்லிகை பூ விலை உயர்வால், பிச்சி பூ விலையும், அதிரடியாக உயர்ந்துள்ளது. தற்போது, பிச்சி முதல் ரகம் 300 - 800 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது குறித்து மொத்த பூ வியாபாரிகள் கூறியதாவது: தற்போது மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால், வரத்தும் குறைந்துள்ளது. நவராத்திரி உற்சவம் மற்றும் தசரா பண்டிகை காரணமாக, வீடுகள், கோவில்களில், மல்லிகை, பிச்சி பூ தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, முகூர்த்தம் இல்லாத நிலையிலும், விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.