பழநி ரோப்காரில் புதிய பற்சக்கரங்கள் பொருத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2017 11:09
பழநி: பழநி முருகன் கோயில் ரோப்கார் பராமரிப்பில், கொல்கட்டாவில் இருந்து புதிய சாப்ட், பற்சக்கரங்களை கொண்டு வந்துபொருத்தி, தீபாவளிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளனர். பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடங்களில் செல்லவும், அதேநேரத்தில் கீழே இறங்கவும் ரோப்கார் காலை 7:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயங்குகிறது. மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒருநாளும், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக ஒரு மாதமும் ரோப்கார் நிறுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான பராமரிப்பு பணிகள் கடந்த ஆகஸ்ட் முதல் மேற்கொள்ளப்படுகிறது. மேல்தளம், கீழ்தளத்தில் கம்பிவடக்கயிறு உட்பட அனைத்தையும் முழுமையாக பரிசோதனை செய்கின்றனர். தேய்மானம் அடைந்த பாகங்களை மாற்றும் பணி நடக்கிறது. சாப்ட், பற்சக்கரங்கள் மாற்றப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்தையும் வரும் தீபாவளிப் பண்டிகைக்குள் முடித்து ரோப்காரை பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளனர்.
கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிகள் தொய்வு இல்லாமல் நடக்கிறது. இதில் கம்பிவடக் கயிறு நன்றாக உள்ளதால் அதனை தற்போது மாற்றவில்லை. கோல்கட்டாவில் இருந்து சாப்ட் வரவழைத்து அதனை மாற்ற உள்ளோம். இதேபோல பிற தோய்மானம் அடைந்த பாகங்களை மாற்றுகிறோம். அக்.15க்குள் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்துவோம். பின், கமிட்டியினர் ஒப்புதல் பெற்று ரோப்கார், பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.